உடுமலை கல்வி மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 படிக்கும் 3,002 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்குவதற்காக அவற்றின் உதிரி பாகங்களை இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இலவச சைக்கிள்
பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருவதற்கு வசதியாக, அவர்களுக்கு தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. இந்த இலவச சைக்கிள்கள், பிளஸ்-1 படிக்கும்போதே வழங்கப்படும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் சரியாக நடைபெறாத நிலையில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
கடந்த கல்வி ஆண்டின் இறுதியில் இருந்துதான் பள்ளிகள் முழுமையாக செயல்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது.
பிளஸ்-2 மாணவர்கள்
கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படாத நிலையில், அவர்கள் இந்த கல்வி ஆண்டு பிளஸ்-2 படித்து வருகின்றனர். அதனால் முதல் கட்டமாக அவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சைக்கிளின் உதிரிபாகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதன்படி உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களை உள்ளடக்கிய உடுமலை கல்வி மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த உதிரிபாகங்களை இணைத்து சைக்கிள்களாக வடிவமைக்கும் பணிகளுக்காக இடவசதி உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவிசாலாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இந்த சைக்கிள் உதிரிபாகங்களை இணைக்கும் பணிகளைத்தொடர்ந்து, சைக்கிள்கள் அந்தந்த பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுப்பிவைக்கப்படும். அதன் பிறகு அந்த சைக்கிள்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
3,002 மாணவ-மாணவிகள்
உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 16, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் 5 உள்ளன. இந்த 21 பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 1,330 மாணவர்களும், 1,672 மாணவிகளும் என மொத்தம் 3,002 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்ட பிறகு அடுத்த கட்டமாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.