தடுப்பணை அடைக்கப்பட்டதால் 300 ஏக்கர் பயிர்கள் கருக தொடங்கியது

திருவெறும்பூர் அருகே தடுப்பணை அடைக்கப்பட்டதால், மழை பெய்தும் பயன் இல்லாமல் 300 ஏக்கர் பயிர்கள் கருக தொடங்கியது. தண்ணீரை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-22 19:58 GMT

திருவெறும்பூர் அருகே தடுப்பணை அடைக்கப்பட்டதால், மழை பெய்தும் பயன் இல்லாமல் 300 ஏக்கர் பயிர்கள் கருக தொடங்கியது. தண்ணீரை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உய்யகொண்டான் வாய்க்கால்

கரூர் மாவட்டம் மாயனூர் வழியாக உய்யகொண்டான் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இதன் மூலம் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது. இந்த தண்ணீர் மூலம் திருச்சி, தஞ்சை மாவட்ட விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட பத்தாளபேட்டை ஊராட்சியில் உள்ள தட்டாங்குளம் தடுப்பணை மூலம் நேரடியாக உய்யகொண்டான் பாசன நீரானது தட்டாங்குளத்திற்கு வந்து அருகே உள்ள புதுகுளம், இணையான் குளம், மற்றும் அங்குள்ள சிறு குளங்களில் நிரப்புகிறது.

தட்டாங்குளம் தடுப்பணை மூடப்பட்டது

இந்த தண்ணீர் மூலம் அருகே உள்ள கோட்ரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனிடையே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இப்பகுதிக்கு ஆயகட்டளை இல்லாததால் இங்கு தண்ணீர் திறக்க முடியாது என கூறியுள்ளனர்.

இதனால் உய்யகொண்டான் நேரடி பாசன தடுப்பணையான தட்டாங்குளம் தடுப்பணை மூடப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன.

60 ஆண்டுகளுக்கும் மேலாக...

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தடுப்பணை வாயிலாக தான் எங்கள் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வந்தோம். தற்போது அதிகாரிகள் திடீரென ஆயகட்டளை இல்லை என கூறி தடுப்பணையை மூடியதால் நெற்பயிர்கள் முற்றிலுமாக வாடி வதங்கும் நிலை ஏற்பட்டுள்ளது, எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர், அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி பாசன வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்