30 டன் குப்பைகள் சேகரிப்பு

ராமநாதபுரம் நகராட்சியில் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது.

Update: 2023-01-16 19:39 GMT

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் தினமும் 20 டன் அளவுக்கு குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல்பண்டிகைகளையொட்டி நகராட்சியில் 30 டன் அளவுக்கு குப்பைகள் சேர்ந்தன. இவற்றை நகராட்சியின் 230 தூய்மை பணியாளர்கள் அகற்றினர். போகியையொட்டி பொதுமக்கள் கழிவுப் பொருட்களை தீவைத்து எரிக்க நகராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டு புகை இல்லா போகி கொண்டாட அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்காக வாரச்சந்தை, பாத்திமா நகர், சாயக்காரத்தெரு, ஹவுசிங் போர்டு மைதானம் ஆகிய 4 இடங்களில் கழிவு பொருள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் பழைய பொருட்களை தீ வைத்து எரிக்காமல் இந்த மையங்களில் ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட 5 டன் அளவு குப்பைகள் நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னதாக குப்பை சேகரிப்பு மையங்களில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியை நகராட்சி தலைவர் கார்மேகம், ஆணையாளர் சுரேந்திரன், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், சுகாதார அலுவலர் குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்