அ.தி.மு.க. மாநாட்டில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் 30 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்-கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேச்சு

அ.தி.மு.க. மாநாட்டில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் 30 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-08-12 19:00 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கிருஷ்ணாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறுகையில், 'மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு, அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் மாநாடு. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் உழைத்து, வெற்றியை ஈட்டி தர வேண்டும். மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இருந்து அ.தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் என 30 ஆயிரம் பேர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் பங்கேற்க வேண்டும்' என்றார். இதையடுத்து வாகனங்களில் ஒட்டும் எழுச்சி மாநாடு ஸ்டிக்கர்களை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

கூட்டத்தில் கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், கருப்பசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார், நகரசபை கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்