30 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு

வேலூர் மாவட்டத்தில் 30 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சிறப்பு முகாமில் ஒரே நாளில் 21,750 பேர் இணைத்தனர்.

Update: 2022-09-04 13:58 GMT

வேலூர் மாவட்டத்தில் 30 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சிறப்பு முகாமில் ஒரே நாளில் 21,750 பேர் இணைத்தனர்.

சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று படிவம் 6 பி- ல் வாக்காளர்களின் ஆதார் எண்ணினைப் பெற்று இணைக்கும் பணியை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் இருந்தது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக மாவட்டம் முழுவதும் 682 வாக்குச்சாவடிகளில்சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது. வாக்குச்சாவடி மையங்களுக்கு பொதுமக்கள் சென்று ஆர்வமுடன் ஆதார் எண்ணை கொடுத்து இணைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வேலூர் தொரப்பாடி அரசு பள்ளி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் நடந்த முகாமினை பார்வையிட்டார்.

30 சதவீதம் பேர்

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த முகாமில் 21 ஆயிரத்து 750 பேர் தங்களது வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டனர். மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 68 ஆயிரத்து 193 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மாதம் 1-ந் தேதி இந்த பணி தொடங்கியது. அதன்படி சனிக்கிழமை வரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 586 பேர் இணைத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த முகாமிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இணைத்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்