செஞ்சி மளிகை கடையில் திருடிய 3 வாலிபர்கள் கைது

கேமராவில் சிக்காமல் இருக்க அண்டாவை தலையில் கவிழ்த்து செஞ்சி மளிகை கடையில் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். டி.ஜி.பி.யிடம் புகார் செய்த மறுநாளே போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

Update: 2022-12-02 18:45 GMT

செஞ்சி:

செஞ்சி காந்தி பஜாரில் உள்ள பிரபல மளிகை கடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மாடி வழியாக கடைக்குள் புகுந்தனர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் முகம் பதிவாகாமல் இருப்பதற்காக தலையில் அண்டாவை கவிழ்த்து வைத்துக்கொண்டு டார்ச் லைட் அடித்து கடையில் இருந்து ரூ.1 லட்சம் ரூபாயை திருடி சென்றனர். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இது குறித்து கடை உரிமையாளர் ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். ஆனால் சம்பவம் நடந்து 2 மாதமாகியும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.

3 வாலிபர்கள் கைது

இது தொடர்பாக நேற்று முன்தினம் மளிகை கடை சார்பிலும், வியாபாரிகள் சார்பிலும் தமிழக டி.ஜி.பி.யிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சாட்டையை சுழற்றியபிறகு செஞ்சி போலீசார் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதாவது, மளிகை கடையில் திருடியதாக செஞ்சி சக்கராபுரத்தை சேர்ந்த சப்பை மகன் உத்தரவேல்(வயது 35), அண்ணாமலை மகன் வெங்கடேசன்(26), செஞ்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த துரை மகன் கர்ணன்(26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இ ருந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்