மரத்தில் கார் மோதி 3½ வயது குழந்தை பலி

தென்காசி அருகே மரத்தில் கார் மோதி 3½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2023-03-14 18:45 GMT

தென்காசி அருகே மரத்தில் கார் மோதி 3½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

வங்கி ஊழியர்

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து விஜயன். இவர் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 30). இவர்களுக்கு மகிலன் (3½) என்ற ஆண் குழந்தை உண்டு.

நேற்று முன்தினம் முத்து விஜயன் தனது காரில் மனைவி, குழந்தையுடன் தென்காசி பகுதிக்கு வந்து கொண்டு இருந்தார். காரை முத்து விஜயன் ஓட்டினார்.

மரத்தில் கார் மோதியது

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பகுதியில் இரவில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாைலயோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் குற்றாலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

குழந்தை சாவு

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அதிகாலையில் குழந்தை மகிலன் பரிதாபமாக இறந்தான். முத்து விஜயன், சரண்யா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மரத்தில் கார் மோதி குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்