திண்டுக்கல் அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கம்

திண்டுக்கல் அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

Update: 2023-07-25 21:45 GMT

திண்டுக்கல் அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

விஷவாயு தாக்கியது

திண்டுக்கல் அருகே பொன்மாந்துரை புதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.

இதில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 35), மேற்குவங்காளத்தை சேர்ந்த ஹர்ஷன் (34), சுமன் இம்ரான் (35) ஆகியோர் நேற்று காலை தோல் தொழிற்சாலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதியில் உள்ள தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தொட்டியில் இருந்து திடீரென்று விஷவாயு தாக்கியது. இதனால் மூச்சுவிட முடியாமல் திணறிய அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

3 பேருக்கு சிகிச்சை

இதனை பார்த்த சக தொழிலாளர்கள், மயங்கி விழுந்த வெங்கட்ராமன் உள்பட 3 பேரையும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் இருந்து மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 தொழிலாளர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், தோல் தொழிற்சாலைக்கு சென்று விசாரித்தார். அப்போது கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் இருந்து வெளியேறிய சல்பைடு என்ற விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்