அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த 3 பெண்கள் கைது

கொள்ளிடம் அருகே அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-10-20 00:15 IST

கொள்ளிடம்:

நாட்டு வெடி

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் பலரும் உயிரிழந்தனர்.இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவுப்படி பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின் பேரில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் சீர்காழி மண்டல துணை தாசில்தார் பாபு, சீர்காழி தீயணைப்பு அலுவலர் ஜோதி, கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் மற்றும் போலீசார் ஆச்சாள்புரம் வள்ளுவர் தெருவிற்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவகுமாரின் குடிசை வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிவகுமார் வீட்டில் நடத்திய சோதனையின் போது அங்கு சிவகுமாரின் மனைவி கலா(வயது 26), பழனிச்சாமி மனைவி இந்திரா(56), மச்சராஜ் மனைவி தனுஷ்(50) ஆகிய மூவரும் நாட்டு வெடிகளை தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவருக்கு வலைவீச்சு

முதல் கிட்ட விசாரணையில் சிவகுமார் பணியாற்றும் பட்டாசு குடோனில் இருந்து வெடி மருந்தை எடுத்து வந்து கொடுத்து இவர்கள் மூவரும் சேர்ந்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் சிவகுமார் வீட்டில் இருந்த நான்கு கிலோ சல்பர், பொட்டு உப்பு, அலுமினிய பவுடர், வெடி மருந்து மற்றும் மைதா மாவு, மிக்ஸிங் கரித்துள், திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், தலைமறைவான சிவகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த வெடி மருந்தை தீயணைப்பு படை வீரர்கள் கைப்பற்றி கொள்ளிடம் ஆற்றில் கரைத்து செயல் இழக்க வைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்