மினி லாரியில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மரக்காணம் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-11 18:45 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு மித்ரன் மேற்பார்வையில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கைப்பாணிக்குப்பம் அருகே நாறவாக்கம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 50 கிலோ எடை கொண்ட 60 சாக்கு மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்

உடனே மினி லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் திருவள்ளூர் மாவட்டம் ஓடூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த கங்கன் மகன் அஜித் (வயது 24) என்பதும் இவரும் திண்டிவனம் தாலுகா நொளம்பூரை சேர்ந்த கோபி (30) என்பவரும் சேர்ந்து திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை வெளிமாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணைக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து கைப்பற்றப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை மரக்காணம் போலீசார், விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் கோபியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்