நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்

நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சி.ஐ.டி.யூ. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-08-21 15:02 GMT

கோத்தகிரி, 

நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சி.ஐ.டி.யூ. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மகாசபை கூட்டம்

நீலகிரி மாவட்ட மரவேலை மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) மகாசபை கூட்டம் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி மோகன் தலைமை தாங்கினார். கலைமணி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாநில செயலாளர் கோபி குமார் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அரசின் நலவாரியத்தில் பதிவு செய்து உள்ள உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஏழை மக்களுக்கு மானிய விலையில் சிமெண்ட் வழங்க வேண்டும். வாரிய பதிவை எளிமையாக்க வேண்டும். பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ.30 கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல அனைத்து சலுகைகளும் உடலுழைப்பு மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

அடிப்படை வசதிகள்

கூடலூரில் செக்சன் 17 பிரிவு பகுதியில் வசிக்கும் மக்கள் மின்சார வசதியின்றி சிரமப்படுவதால், அவர்களுக்கு மின்சார வசதி வழங்க வேண்டும். தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக (டேன்டீ) தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ரூ.425.40 வழங்க வேண்டும். மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க டேன்டீயை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சி.ஐ.டி.யூ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தையல் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் முத்து நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்