வெவ்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
மதுரையில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழிப்பறி
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 57). இவர் மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் கணேசன் அந்த பகுதியில் உள்ள கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த 2 பேர், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து கணேசன் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறியில் ஈடுபட்டது அதேபகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (27), ஜீவா நகரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (27) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையொட்டி தேவர் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் அவர் பாலமுருகன் என்ற பஞ்சாயத்து பாலா (25) என்பதும், வழிப்பறியில் ஈடுபடுவதற்காக அப்பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது.