திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை டிரைவர் உள்பட 3 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-16 19:22 GMT

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகள் சோதனை

சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் மூலம் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

டிரைவரிடம் விசாரணை

இதற்கிடையில் சுங்கத்துறையில் டிரைவராக பணியாற்றி வரும் குமார் என்பவர் விமான நிலையத்தில் இருந்து வேகமாக வெளியேறினார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து அவரை சோதனை செய்ததில், அவரிடம் 1 கிலோ தங்கம் இருந்தது. அதனை அவர் வெளியே கொண்டு செல்ல முயன்றபோது, சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்.

கடத்தலுக்கு உதவி

பின்னர் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த நடராஜன் (வயது 43) என்ற பயணி கடத்தி வந்த தங்கத்தை சுங்கத்துறை டிரைவர் குமார் விமான நிலையத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வரும் பாதை வழியாக வெளியே கொண்டுவர உதவி செய்தது தெரியவந்தது.

சுங்கத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை அதிகாரிகள் சோதனை செய்வதில்லை. இதனை பயன்படுத்தி குமார் தங்கத்தை வெளியே கொண்டுவர முயற்சித்துள்ளார். மேலும் டிரைவர் கொடுத்த தகவலின் பேரில் தங்கத்தை பெறுவதற்காக விமான நிலைய வாகன நிறுத்தத்தில் காத்திருந்த புதுக்கோட்டையை சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை குமார் பலமுறை வெளியே கொண்டு வந்து கொடுத்ததாக தெரியவந்தது.

3 பேர் கைது

மேலும் சுங்கத்துறையின் உயர் அதிகாரிகள் மட்டுமே செல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை டிரைவர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் யாரேனும் தங்கம் கடத்தலுக்கு உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனையடுத்து இந்த கடத்தலில் ஈடுபட்ட சுங்கத்துறை டிரைவர் குமார், புதுக்கோட்டையை சேர்ந்த டேனியல், மைக்கேல், அறந்தாங்கியை சேர்ந்த நடராஜன் ஆகிய 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அதே நேரத்தில் குமார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 56 லட்சம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்