வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் நாகப்பட்டினம் கோர்ட்டில் சரண்
சமயபுரம் டாஸ்மாக் பாரில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாகப்பட்டினம் கோர்ட்டில் 3 பேர் சரண் அடைந்தனர்.
சமயபுரம் டாஸ்மாக் பாரில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாகப்பட்டினம் கோர்ட்டில் 3 பேர் சரண் அடைந்தனர்.
வெட்டிக்கொலை
திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே உள்ள சேனியகல்லுக்குடியை சேர்ந்த மாரியப்பனின் மகன் பாபு (வயது 28). இவர் சமயபுரத்தில் உள்ள பூக்கடை ஒன்றில் மாலை கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் சமயபுரம் நால்ரோட்டில் டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மது அருந்திய சமயபுரம் அருகே உள்ள வீ.துறையூரை சேர்ந்த சிலருக்கும், பாபுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக பாபுவை வெட்டியது. இதில் உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
6 பேரிடம் விசாரணை
இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாபுவிற்கும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை பணம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அழைத்துச்செல்வதில் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
மேலும், இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை தொடர்பாக சமயபுரம் பகுதியை சேர்ந்த 6 பேரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பேர் சரண்
இந்நிலையில்,இக்கொலை சம்பவம் தொடர்பாக நாகப்பட்டினம் கோர்ட்டில் வீ.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த நீலமேகம் என்பவரது மகன்கள் வெங்கடாஜலபதி (25), கணேசன் (24), விநாயகமூர்த்தி (23) ஆகியோர் சரண் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் சகோதரர்கள் ஆவர்.