தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
குளித்தலை அருகே தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தொழிலாளி கொலை
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நச்சலூர் தாட்கோ காலனியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவருடைய மகன் வடிவேல் (வயது 30). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 9.7.2020 அன்று அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த வேலு என்கிற வேலுச்சாமி (36), சதீஷ்குமார் (30, சங்கர் (22) ஆகிய 3 பேரும் சேர்ந்து வடிவேலை தாக்கினர்.இதில் படுகாயம் அடைந்த வடிவேல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செல்லம்மாள் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, வேலுச்சாமி, சதீஷ்குமார், சங்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
3 பேருக்கு ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், இதற்கான தீர்ப்பை நீதிபதி சண்முகசுந்தரம் வழங்கினார்.வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு, ஆபாசமாக திட்டியதற்காக 15 நாட்கள் சிறை தண்டனையும், ரூ.100 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 7 நாட்கள் சிறை தண்டனையும், கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், தடயத்தை அழிக்க முயன்றதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.இதையடுத்து வேலுச்சாமி, சதீஷ்குமார், சங்கர் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.