வழிப்பறி வழக்கில் 3 பேருக்கு 7 மாதம் சிறை தண்டனை

Update: 2023-09-26 18:52 GMT

தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேருக்கு தலா 7 மாதம் சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது

வேலூர் தொரப்பாடி காமராஜர் தெருவை சேர்ந்தவர் டீக்காராமன் (வயது 30), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த மார்ச் மாதம் சல்வன்பேட்டையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சட்டைப்பையில் வைத்திருந்த 3,100 ரூபாயை பறித்து சென்றனர்.

இதுகுறித்து டீக்காராமன் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

அதில் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (36), சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (24), திருச்சி அரியமங்கலம் நேதாஜி தெருவை சேர்ந்த தயா என்கிற ராஜசேகர் (23) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈஸ்வரனை சேலம் மத்திய சிறையிலும், மற்ற 2 பேரையும் வேலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

7 மாதங்கள் சிறை தண்டனை

இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-1) நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் உதவி வக்கீல் ஜீவிதா ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட்டு சத்தியகுமார் வழிப்பறி வழக்கில் கைதான செந்தில்குமார், ஈஸ்வரன், ராஜசேகர் ஆகியோருக்கு தலா 7 மாதம் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்தார்.

அபராத தொகையை செலுத்தாவிட்டால் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் பலத்த காவலுடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்