வெவ்வேறு விபத்தில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் பலி

வெவ்வேறு விபத்தில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

Update: 2023-10-22 17:48 GMT

வெவ்வேறு விபத்தில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

லாரி டிரைவர்

முசிறி அருகே உள்ள ஏழூர்பட்டி வாளவாத்தி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). இவர் இனாம் குளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்பந்த அடிப்படையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பணிக்கு வந்த அவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எதிர்புறம் உள்ள உணவகத்திற்கு சாப்பிட செல்ல சாலையை கடந்துள்ளார். அப்போது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் இனாம்குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் கள்ளிக்குடியை சேர்ந்த மாணிக்கம் (56) என்பவரை கைது செய்தனர்.

மற்றொரு விபத்து

லால்குடி அருகே மணக்கால் கிராமத்தைச் சேர்ந்த சாத்தையன் மகன் வெற்றிச் செல்வன் (26). இவர் மோட்டார் சைக்கிளில் கொப்பாவளி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த சரக்குவேன் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வெற்றிச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்

உப்பிலியபுரம் ஒன்றியம் சிக்கத்தம்பூர் ஊராட்சி எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் தமிழழகன். இவர் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு துறையூரில் இருந்து சிக்கத்தம்பூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழழகன் உயிரிழந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்