விவசாயி உள்பட 3 பேர் பலி

வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-09-12 17:02 GMT

கார் மோதி விவசாயி பலி

வடமதுரை அருகே உள்ள உடையாம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 61). விவசாயி. நேற்று காலை இவர், திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை பை-பாஸ் பிரிவில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பழனியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார், கணேசனின் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் கலைவேந்தன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான கணேசனுக்கு ராஜாமணி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயிண்டர் சாவு

நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூர் ஆவையம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 32). பெயிண்டரான இவர், சென்னையில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரமாக, லட்சுமணன் திருச்சியில் வேலை செய்தார். இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி செம்பட்டி அருகே உள்ள பாளையங்கோட்டை கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் லட்சுமணன் சென்றார்.

திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், வடமதுரையில் உள்ள சமுதாயக்கூடம் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் எதிர்திசையில், பாடியூர் அருகே உள்ள இ.புதூரை சேர்ந்த மணி (52) என்பவர் ஓட்டி வந்த மொபட், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லட்சுமணன் படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி சக்கரத்தில் சிக்கி...

சாணார்பட்டி அருகே உள்ள கோணப்பட்டியை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 38). இவர், கூவனூத்து கிராமத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் இவர், தொழிற்சாலை வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தென்னை நார் ஏற்றுவதற்காக லாரி ஒன்று வந்தது. அந்த லாரி, பின்பக்கமாக வந்து கொண்டிருந்தது. இதனை நாகலட்சுமி கவனிக்கவில்லை. இதனையடுத்து அந்த லாரி, நாகலட்சுமி மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்