லாரி மோதி அக்காள், தங்கை உள்பட 3 பேர் சாவு

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் அக்காள், தங்கை உள்பட 3 பேர் பலியானார்கள்.

Update: 2023-02-14 18:51 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் இருதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார். இவருடைய மகள்கள் தமிழரசி (வயது 19), தமிழ்பிரியா (17). தமிழரசி தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கார்டியாடிக் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தமிழ்பிரியா சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிசியோதெரபி படித்து வந்தார்.

இந்த நிலையில் அக்காள், தங்கைகளான தமிழரசியும், தமிழ்பிரியாவும் அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினர் முனிராஜ் மகன் அம்பேத்வளவன் (10) என்ற சிறுவனுடன் மொபட்டில் நேற்று மதியம் தேன்கனிக்கோட்டைக்கு சென்றனர்.

சக்கரத்தில் சிக்கி 3 பேரும் சாவு

சாப்பராணப்பள்ளி அருகே உள்ள வளைவில் சென்றபோது, இருதுக்கோட்டையில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு தீவனம் ஏற்றி சென்ற லாரி, மொபட் மீது நேருக்கு நேர் மோதியது.

இதனால் நிலைதடுமாறி 3 பேரும் சாலையில் விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கினர். இதில் தமிழரசி, தமிழ்பிரியா, சிறுவன் அம்பேத்வளவன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்