தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

Update: 2023-01-06 19:58 GMT

வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

திருச்சி நெ.1 டோல்கேட் ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் அருண் (வயது 40), இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்கெட்டிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அருண் வேலை முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உத்தமர்கோவில் பாலம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது, எதிரே நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக அருண் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருண் நிலைத் தடுமாறி கீழே விழுந்தபோது லாரியின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

முசிறியை அடுத்த ராயப்பட்டி குடித்தெருவை சேர்ந்தவர் மகிழரசு (30). இவர் கேட்டரிங் படித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியார் ஓட்டலில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஊருக்கு வந்து இருந்த இவர் பொன்னாங்கண்ணி பட்டி ரோடு வண்ணான் குட்டை அருகே நடந்து சென்றார்.

அப்போது, சின்ன வேலகாநத்தத்தை சேர்ந்த சேகர் மகன் ராஜ்குமார் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மகிழரசு மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் பலி

முசிறி மின்சார அலுவலகம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி மலர்க்கொடி (55). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி பஸ் டிரைவர் கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்