அழகு நிலைய ஊழியர் கொலையில் கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது

அழகு நிலைய ஊழியர் கொலையில் கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது

Update: 2022-09-21 18:45 GMT

கோவை

ஆபாச காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய அழகு நிலைய ஊழியரை 12 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதலி உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அழகு நிலைய ஊழியர்

கோவையை அடுத்த துடியலூரில் குப்பைத்தொட்டியில் கடந்த 15-ந் தேதி ஒரு ஆணின் துண்டிக்கப்பட்ட இடது கை கிடந்தது. அதை கைப்பற்றி துடியலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் பிரபு (39) என்பவர் மாயமானதாக அவரு டைய மனைவி புகார் அளித்து இருந்தார். எனவே அவர் தங்கி இருந்த அறையில் இருந்த கைரேகை மற்றும் துண்டிக்கப்பட்ட கையில் உள்ள ரேகை ஆகியவற்றை கைரேகை நிபுணர்கள் ஒப்பிட்டு பார்த்தனர். இதில் துண்டிக்கப்பட்ட கைக்கு உரியவர் பிரபு என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

வீடியோ காட்சி

இந்த கொலையில் துப்புதுலக்க பெரியநாயக்கன்பாளையம் துணை சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. அவர்கள், பிரபு தங்கி இருந்த சரவணம்பட்டி உள்பட பல இடங்க ளில் உள்ள 150 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் பிரபுவை 2 பேர் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் பிரபுவின் செல்போனில் அவரை யார் எல்லாம் தொடர்பு கொண்டனர் என்று ஆய்வு செய்தனர்.

இதில் அழகு நிலையத்தில் வேலை பார்த்த பிரபுவுக்கு கவிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் தனிமையில் நெருக்கமாக இருந்து உள்ளனர். இதற்கிடையே கவிதாவுக்கு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் எலெக்ட்ரீசியன் அமுல்திவாகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நெருங்கி பழகி உள்ளனர்.

ஆபாச படங்கள்

இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு, கவிதாவை கண்டித்து உள்ளார். மேலும் கவிதாவுடன் நெருக்கமாக இருந்த ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக பிரபு மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டார்.

இது பற்றி அவர், தனது ஆண் நண்பர் அமுல் திவாகர் மற்றும் கார்த்திக் ஆகியோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் திட்டமிட்டு பிரபுவை காந்தி மாநகரில் உள்ள அமுல் திவாகரின் வீட்டுக்கு கூட்டி அழைத்து சென்றனர். அங்கு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். அதன்பிறகு பிரபுவின் உடல் பாகங்களை 12 துண்டுகளாக வெட்டியுள்ளனர். அவற்றை பையில் அடைத்து துடியலூர் பகுதியில் உள்ள பாழுங்கிணற்றில் சில பாகங்களை வீசி உள்ளனர். அதில் இடது கையை குப்பை தொட்டியில் வீசி உள்ளனர்.

3 பேர் கைது

இதில், துண்டிக்கப்பட்ட கை தான் முதலில் போலீசாருக்கு கிடைத்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி, அந்த கை பிரபுவுக்கு உரியது என்பதும், அவரை கொலை செய்யப்பட்டு இருப்ப தையும் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து பிரபுவை கொலை செய்த அவருடைய கள்ளக்காதலி கவிதா, ஆண் நண்பர் அமுல் திவாகர் (34) மற்றும் கார்த்திக் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பிரபுவின் தலை, கால் உள்பட 8 உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. மேலும் 4 பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, மற்றும் உடலை வெட்டி கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசாருக்கு பரிசு

இந்த வழக்கில் போலீசார் துப்புதுலங்கியது குறித்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நிருபர்களிடம் கூறுகையில், சவாலாக அமைந்த இந்த கொலை வழக்கில் போலீசார் சிறப்பாக செயல்பட்டு 6 நாட்களில் துப்புதுலக்கி உள்ளனர். எனவே தனிப்படையை சேர்ந்த 43 போலீசாருக்கு ரொக்கப்பரிசாக மொத்தம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 26 கொலைகள் நடந்து உள்ளது. கடந்த ஆண்டு 40 கொலைகள் நடந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.

அப்போது டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்