பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் பணம் பறித்த ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
‘மார்பிங்' செய்த ஆபாச வீடியோவை ‘வாட்ஸ்-அப்' மூலம் அனுப்பி பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் பணம் பறித்த ராஜஸ்தானை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
'மார்பிங்' செய்த ஆபாச வீடியோவை 'வாட்ஸ்-அப்' மூலம் அனுப்பி பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் பணம் பறித்த ராஜஸ்தானை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
எம்.எல்.ஏ.வுக்கு ஆபாச வீடியோ
தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சரவணக்குமார் (வயது 48). தி.மு.க.வை சேர்ந்தவர். கடந்த 1-ந்தேதி இவருடைய செல்போன் எண்ணுக்கு 'வாட்ஸ்-அப்' வீடியோ கால் வந்தது. புதிய எண் என்ற போதிலும் அந்த அழைப்பை அவர் ஏற்றார். வீடியோ காலில் எதிர்முனையில் யாரும் பேசாததால் அந்த அழைப்பை அவர் துண்டித்தார்.
சிறிது நேரத்தில், அவருடைய செல்போன் எண்ணுக்கு, எம்.எல்.ஏ. வீடியோ காலில் ஒரு பெண்ணுடன் பேசுவது போன்றும், எதிர்முனையில் அந்த பெண் நிர்வாணமாக இருப்பது போன்றும் மார்பிங் செய்யப்பட்ட ஒரு வீடியோ வந்தது. அதைப் பார்த்து சரவணக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.
வழக்குப்பதிவு
வீடியோ அனுப்பிய நபர்கள், சரவணக்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டினர். எதிர்முனையில் மிரட்டிய நபர்களுக்கு 3-ந்தேதி ரூ.5 ஆயிரம், 8-ந்தேதி ரூ.5 ஆயிரம் என ரூ.10 ஆயிரம் அனுப்பிய நிலையில், மீண்டும் அவர்கள் பணம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், சரவணக்குமார் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க தேனி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகிக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் கடந்த 10-ந்தேதி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
ராஜஸ்தானுக்கு தனிப்படை
எம்.எல்.ஏ.வுக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் அழைப்பு வந்த செல்போன் எண், அவர் பணம் அனுப்பிய 'கூகுள்-பே' எண், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஒரு செல்போன் எண் மேகாலயா மாநிலத்தில் வாங்கப்பட்டதும், வங்கிக்கணக்கு மராட்டிய மாநிலத்தில் தொடங்கப்பட்டதாகவும் தெரியவந்தது. மேலும் பணம் பறித்த நபர்கள் இந்த சதித்திட்டத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செயல்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் ராஜஸ்தான் விரைந்தனர். அங்கு உள்ளூர் போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மோசடி கும்பல் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை அடுத்த கோவிந்த்கர்க் என்ற ஊரில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது.
3 பேர் கைது
அங்கு விரைந்த தனிப்படையினர் அதே ஊரைச் சேர்ந்த அர்ஷத்கான் (38) உள்பட 3 பேரை பிடித்தனர். இதில் 2 பேர் சிறுவர்கள். இவர்கள் 3 பேர் உள்பட சிலர் கூட்டுச் சேர்ந்து எம்.எல்.ஏ.வுக்கு வீடியோ கால் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து, பின்னர் மார்பிங் செய்து பணம் பறித்ததாக தெரியவந்தது. இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அர்ஷத்கான், 2 சிறுவர்களையும் போலீசார் நேற்று கைது செய்து தேனிக்கு அழைத்து வந்தனர். கைதான அர்ஷத்கானுக்கு ஏற்கனவே போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி செய்தது உள்ளிட்ட சில சைபர் குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவர்களுக்கு எம்.எல்.ஏ.வின் செல்போன் எண் எப்படி கிடைத்தது? வேறு யாரிடம் எல்லாம் இதுபோன்ற பணம் பறித்துள்ளனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
'குற்றவாளிகளை பிடிப்பதற்காக பணம் அனுப்பினேன்'
பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமாரின் 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு மார்பிங் செய்த ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து சரவணக்குமார் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
கடந்த 1-ந்தேதி இரவில் எனக்கு 'வாட்ஸ்-அப்' வீடியோ கால் வந்தது. தொகுதியில் பலரிடமும் எனது எண் இருக்கும் என்பதால் அந்த வீடியோ அழைப்பை ஏற்றேன். எதிர்முனையில் யாரும் பேசாததால் அழைப்பை துண்டித்தேன். பின்னர் மார்பிங் செய்த வீடியோ வந்ததால், மறுநாள் (2-ந்தேதி) தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தேன். குற்றவாளி போலியான முகவரியில் செல்போன் எண்ணை வாங்கி பயன்படுத்தி இருந்தால் அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படலாம் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். அந்த எண்ணும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சைபர் கிரைம் போலீசாரின் வழிகாட்டுதலின் பேரில் 3-ந்தேதியும், 8-ந்தேதியும் பணம் அனுப்பினேன். அந்த பணத்தை எடுத்து பயன்படுத்திய மோசடி நபர்களை, திறம்பட செயல்பட்டு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.