தூத்துக்குடியில்பாதாள சாக்கடை கட்டுமான பொருட்களை திருடிய 3 பேர் கைது
தூத்துக்குடியில்பாதாள சாக்கடை கட்டுமான பொருட்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் ஜாக்கி என்ற இரும்பு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் 22 ஜாக்கிகளை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த தவசிமுத்து மகன் மாதவன் (வயது 34), தெர்மல்நகர் கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்த லசால் மகன் ஜெய பென்சிங் (40) மற்றும் முத்தையாபுரம் பி.டி ஆறுமுகம் தெருவை சேர்ந்த முருகன் மகன் மாசானமுத்து (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மேற்படி கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த ஜாக்கிகளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.66 ஆயிரம் மதிப்புள்ள 22 ஜாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.