பெண்ணிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது

மயிலாடுதுறையில் பெண்ணிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது

Update: 2023-05-10 18:45 GMT

மயிலாடுதுறையில் பெண்ணிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சங்கிலி பறிப்பு

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜெயகோபி. இவருடைய மனைவி இளவரசி (வயது 36). இவர் சீனிவாசபுரம் மெயின்ரோட்டில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் உள்ள உதிரிபாகங்கள் விற்பனை பிரிவில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி வேலை முடிந்து முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் தனது கணவர் வருகைக்காக சீனிவாசபுரம் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அருகில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் இளவரசி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இளவரசி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்ததன் அடிப்படையில் பெண்ணிடம் தாலிச் செயலை பறித்து சென்ற மர்ம நபர்களின் அடையாளம் காணப்பட்டு அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே சேத்தூர் புது தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீராம் (18), காரைக்கால் கட்லூர் வடக்கு தெருவை சேர்ந்த தெய்வசிகாமணி மகன் பாபிலோன் ராஜ் (20) மற்றும் காரைக்கால் வரிச்சிக்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த தாலி செயினை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதில் ஸ்ரீராம், பாபிலோன்ராஜ் ஆகிய 2 பேரும் கோர்ட் உத்தரவுப்படி ஜெயிலில் அடைக்கப்பட்டார். மற்றொரு குற்றவாளியான 17 வயது சிறுவன் தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்