போலி முகவரியை பதிவு செய்து சிம்கார்டு விற்ற 3 பேர் கைது

கோவையில் போலி முகவரியை பதிவு செய்து சிம்கார்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-18 20:00 GMT

கோவை

கோவையில் போலி முகவரியை பதிவு செய்து சிம்கார்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிம்கார்டு விற்பனை

நமது நாட்டில் உள்ள சிம்கார்டுகள் யார் பெயரில் உள்ளது, ஒரே நபரின் பெயரில் எத்தனை சிம்கார்டுகள் வாங்கப்பட்டு உள்ளன? என்பதை கண்டறிய மத்திய தொலை தொடர்புத்துறை தனியாக சாப்ட்வேர்களை வைத்து உள்ளது.

இந்தநிலையில் அந்த சாப்ட்வேர்களை பயன்படுத்தி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, தமிழகத்தில் மட்டும் ஒரே நபரின் பெயரில் பல்வேறு சிம்கார்டுகள் வாங்கி இருப்பது தெரியவந்தது. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

3 பேர் கைது

அதன்பேரில் கோவை மாநகர மற்றும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில், கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42), பொள்ளாச்சி தென்குமாரபாளையத்தை சேர்ந்த ராம்குமார் (37), ராமசுப்பிரமணியன் (41) ஆகியோர் ஒரே நபரின் முகவரியை பதிவு செய்து பல சிம்கார்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் செந்தில்குமார், ராம்குமார், ராமசுப்பிரமணியன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

போலி முகவரி

போலி முகவரியை பதிவு செய்து அதிக விலைக்கு சிம்கார்டுகளை விற்பனை செய்து உள்ளனர். இதில் மாநகர பகுதியில் செந்தில்குமார் 254 சிம்கார்டுகளையும், புறநகர் பகுதியில் ராம்குமார், ராமசுப்பிரமணியன் ஆகியோர் சேர்ந்து 4 பேரின் முகவரியை வைத்து 290 சிம்கார்டுகளையும் விற்று உள்ளனர்.

அதாவது அந்த 3 பேரும், சிம்கார்டு வாங்க வருபவர்களின் முகவரி மற்றும் புகைப்படத்தை, முகவரிக்கான சான்று கொண்டு வராதவர்களுக்கும் பதிவு செய்து சிம்கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதனால் சிம்கார்டு ஒருவரின் முகவரியில் இருக்கும். அதை பயன்படுத்துபவர் மற்றொருவராக இருப்பார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்