கஞ்சா விற்ற 3 பேர் கைது

தேனி அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் சினிமா பாணியில் துரத்திப் பிடித்தனர்.

Update: 2022-11-16 18:45 GMT

தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் ஜெயமங்கலம் அருகே எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்திய போது, ஆண்டிப்பட்டி அருகே மணியாரம்பட்டியை சேர்ந்த சரத்குமார் (23), அருண்பாண்டி (28), மகேந்திரன் ஆகியோர் இந்த கஞ்சாவை விற்பனை செய்ய கொடுத்ததாக கூறினார். அதன்பேரில் 3 பேரையும் பிடிக்க மணியாரம்பட்டிக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். போலீசார் நெருங்கி வந்ததால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். அவர்களை சினிமா பாணியில் போலீசார் விரட்டிச் சென்றனர். அதில், சரத்குமார், அருண்பாண்டி இருவரும் போலீசாரிடம் சிக்கினர். மகேந்திரன் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். அதில், சரத்குமாரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்