வீடுகளில் கொள்ளையடித்த 3 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 வீடுகளில் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-31 19:03 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 வீடுகளில் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

8 பவுன் நகை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெருவை சேர்ந்தவர் சிவமணி. இவரது மகள் வெளியூரில் வசித்து வருகிறார். கடந்த 2 வாரத்திற்கு முன்பு மகள் வீட்டுக்கு சென்றதால் வீடு பூட்டியே இருந்தது. வீடு பூட்டப்பட்டதை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த 8 பவுன் நகையை கொள்ளை அடித்துச் சென்றனர்.

இதேபோல் பழைய மதுரை சாலையில் வெளிநாட்டில் தனது மகள் வீட்டில் வசிக்கும் ஒருவரின் வீட்டில் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெரிய அளவிலான டி.வி.யும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

25-ந் தேதி நடைபெற்ற இந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருவண்ணாமலையை சேர்ந்த ராமஜெயம்(வயது 30), மதுரை மேலூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(42), கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அசோக்குமார்(32) என 3 பேரை கைது செய்தனர்.

பறிமுதல்

மேலும் இவர்கள் 3 பேரும் கோபிசெட்டிபாளையத்தில் ஜெயிலில் இருந்த போது நண்பர்கள் என்பதும், இந்த கொள்ளை சம்பவத்திற்கு கார் ஒன்று வாங்கி அந்த காரை பயன்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அந்த காரையும், கொள்ளையடிக்கப்பட்ட 8 பவுன் நகையையும், டி.வி.யையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொள்ளை நடந்த சில நாட்களில் கொள்ளையர்களை பிடித்து பொருட்களை மீட்ட போலீசாரை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தொடர் விசாரணை அடிப்படையில் கொள்ளையர்களை பிடித்ததாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்