செங்கல்பட்டு, திருச்சி, மதுரையில் புதிதாக 3 தொழிற்பேட்டைகள்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

செங்கல்பட்டு, திருச்சி, மதுரை மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள 3 தொழிற்பேட்டைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-27 21:44 GMT

சென்னை,

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றிடும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-ந் தேதி பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதை முன்னிட்டு சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு விழாவாக நேற்று நடைபெற்றது.

விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம், இந்த ஆண்டு அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணைகளை வழங்கி தொடங்கிவைத்தார்.

3 தொழிற்பேட்டைகள்

இத்திட்டத்தின் கீழ் தொழிற்சாலைக்கான நிலம், கட்டிடம், எந்திர தளவாடங்கள் மற்றும் ஒரு சுழற்சிக்கான நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் மதிப்பில் 35 சதவீத முதலீட்டு மானியத்துடன் கடன் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல், 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட மூன்று மாத காலத்தில் இதுவரை 127 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு ரூ.24.26 கோடி மானியத்துடன் ரூ.45 கோடி கடன் வழங்க ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262.03 ஏக்கர் பரப்பளவில் ரூ.153.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 3 தொழிற்பேட்டைகளை முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார். இதன் மூலம் 21 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

குறுந்தொழில் குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டம் காடம்புலியூரில் அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்.

மேலும், இவ்விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் மெய்நிகர் கண்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதில் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மாணவர்கள் புத்தாக்க சிந்தனையுடன் படிப்பை முடித்த பிறகு பலருக்கு வேலை கொடுப்பவராக மாற்றக்கூடிய, பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் கடந்த ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் பதிப்பின் கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ அணிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு முதல்-அமைச்சர் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ரூ.10 லட்சத்தை வழங்கினார்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கிய ரூ.1,510 கோடி மதிப்பில் 7,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பிற்கான 'பேம் டிஎன்' அமைப்பிற்கும், தொழில்முனைவோருக்கும் இடையே 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், சிட்பி நிறுவனம் மூலம் கடன் பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் சலுகைகளை வழங்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு சிட்பி மூலம் நிதி ஆதாரங்கள் ஏற்படுத்தவும், பேம் டிஎன் மற்றும் சிட்பி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

விருதுகள்

தொழில்துறையின் வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த தொழில்முனைவோர் விருதை வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் காஞ்சீபுரம் பிரிசிசன்ஸ் எக்யுப்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கும்; மாநில அளவில் சிறந்த மகளிர் தொழில்முனைவோர் விருதை வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் காஞ்சீபுரம் யுனிடெக் பிளாஸ்டோ காம்பொனன்ட்ஸ் நிறுவனத்திற்கும்;

மாநில அளவில் சிறந்த வேளாண் சார் தொழில் நிறுவனத்திற்கான விருதை மாம்பழ கூழ் தயாரிக்கும் கிருஷ்ணகிரி பவித்ரன் அசப்டிக் ப்ரூட் புராடக்ட் நிறுவனத்திற்கும்; மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கான விருதை விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் சேலம் ஏரோஸ்பேஸ் என்ஜினியர்ஸ் நிறுவனத்திற்கும்; மாநில அளவிலான சிறந்த சிறப்பு பிரிவைச் சேர்ந்த சிறந்த நிறுவனத்திற்கான விருதை எந்திர தளவாடங்கள் தயாரிக்கும் கோவை டிஎம் என்ஜினியரிங் நிறுவனத்திற்கும் முதல்-அமைச்சர் வழங்கினார்.

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி வசதியை சிறப்பாக வழங்கிய சிறந்த வங்கிக்கான முதலிடத்திற்கான விருதை இந்தியன் வங்கிக்கும்; 2-ம் இடத்திற்கான விருதை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும்; 3-ம் இடத்திற்கான விருதை பேங்க் ஆப் பரோடா வங்கிக்கும் முதல்-அமைச்சர் வழங்கினார்.

பங்கேற்றோர்

விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண் ராய்,

டான்சி நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஸ்வர்ணா, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன், சிட்கோ நிறுவன மேலாண்மை இயக்குனர் மதுமதி, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குனர் சந்திரகலா, தொழில் வணிகத்துறையின் கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சிவராஜா ராமநாதன், தமிழ்நாடு குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் மாரியப்பன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்