கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத திறன் பயிற்சி

கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-01-06 21:52 GMT

கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.

திறன் பயிற்சி

இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகேசன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உருவாக்கப்பட்டு, அதனுடன் 18 வகை தொழிலாளர் நலவாரியங்கள் செயல்படுகிறது. இதில் உறுப்பினராக 18 வயது முதல் 60 வயது வரை உள்ள தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் நலத்திட்டத்தை பெறுகின்றனர். இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை, நலத்திட்டம் வழங்கப்படுகிறது.

மேலும் கொத்தனார், பற்ற வைப்பவர்கள், மின்சார வேலை, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர்கள் உட்பட பல தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் மூலம், 3 மாத திறன் பயிற்சி, ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. 3 மாத கால பயிற்சியில் முதல் மாதம் தையூரில் அமைய உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், 2-வது மாதம் காஞ்சீபுரம் மாவட்டம் நீவலூரில் உள்ள எல்.அண்ட்.டி. கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் பயிற்சி வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு

பயிற்சி பெற உள்ளவர்கள் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அல்லது ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும். 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறுவோருக்கு எல்.அண்ட்.டி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். மேலும் ஒரு வார பயிற்சி, தையூரில் கட்டுமான கழகம் வழங்கும். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பயிற்சி பெறலாம்.

பயிற்சி பெறுபவர்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தலா ரூ.800 வழங்கப்படும். இந்த தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். எனவே தகுதியானவர்கள் ஈரோடு சென்னிமலை ரோடு ஐ.டி.ஐ. பின்புறம் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு 0424 2275591, 2275592 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்