பொள்ளாச்சியில் அதிவேகமாக சென்றால் 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து-வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை

அதிவேகமாக சென்றால் 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு நடந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் பேசினார்.

Update: 2023-06-30 18:45 GMT

பொள்ளாச்சி

அதிவேகமாக சென்றால் 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு நடந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் பேசினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஜமீன்ஊத்துக்குளியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் பிரியங்கா கலந்துகொண்டு போக்குவரத்து விதிகள் குறித்து பேசினார். வழக்கமாக ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் போக்குவரத்து அதிகாரிகள் வால்பாறை ரோட்டில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி, அபராதம் விதிக்காமல் விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த குறும்படத்தை போட்டு காண்பித்தனர். மேலும் பெட்ரோலில் கலப்படத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி, முன்னாள் போக்குவரத்து வார்டன் கமலகண்ணன், தேசிய தென்னைநார் கூட்டமைப்பு செயலாளர் ஆதித்யா ஜெயராமசந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது:-

ஓட்டுனர் உரிமம் ரத்து

18 வயது பூர்த்தி அடையாத குழந்தைகளை பெற்றோர்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது. மேலும் அனுபவம் இல்லாதவர்கள் அதிக திறன் கொண்ட வாகனங்களை ஓட்ட கூடாது. பெரும்பாலான விபத்துக்கள் இருசக்கர வாகனங்களால் தான் ஏற்படுகிறது. இருசக்கர வாகன விபத்துக்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவதில்லை. அதிவேகமாக, செல்போன் பேசிக் கொண்டு கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுவதாலும் விபத்துக்கள் நடக்கிறது. அதிவேகமாக, அதிக ஒலி எழுப்பிக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து செய்யப்படும்.

பொள்ளாச்சி பகுதிகளில் 80 சதவீத விபத்துகள் இருசக்கர வாகனங்கள் தான் ஏற்படுகிறது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால் இழப்பீடு கிடைக்காது. போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து விபத்துக்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாகனங்களை விற்பனை செய்யும் போது 4 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் ஏதாவது குற்ற செயல் நடக்கும் போது சிக்கி கொள்ள வேண்டிய இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்