பீகாரை சேர்ந்த இடைத்தரகர்கள் 3 பேர் கைது
‘நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்ட வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இடைத்தரகர்கள் 3 பேரை தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம்
சென்னையை சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். அவருடைய மகன் உதித்சூர்யா. இவர், தேனி அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்ந்தார். சான்றிதழ்கள் சரிபார்ப்பின் போது அவர் 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து இருப்பதாகவும், ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதன்படி தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆள்மாறாட்டம் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அதற்கு உடந்தையாக இருந்த அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் மேலும் சில மாணவர்கள், இடைத்தரகர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் 7 மாணவர்கள், அவர்களின் பெற்றோர் 7 பேர் மற்றும் இடைத்தரகர்கள் 3 பேர் என மொத்தம் 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர்.
இடைத்தரகர் கைது
இந்த வழக்கில் முக்கிய நபராக தேடப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த இடைத்தரகர்கள் ரஷீத் கடந்த ஆண்டு ஜனவரி 7-ந்தேதி தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது, இந்த வழக்கில் பீகாரை சேர்ந்த கிருஷ்ணா முராரி (வயது 37) என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்த்ததாகவும் கூறினார். பின்னர் இந்த வழக்கில் ரஷீத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கிருஷ்ணா முராரியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், அவர் தலைமறைவாகவே இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சில நாட்களுக்கு முன்பு தனிப்படையினர் சென்னைக்கு விரைந்தனர். அங்கு கிருஷ்ணா முராரியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரும் இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது.
பெங்களூருவில் 2 பேர் சிக்கினர்
மேலும் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷாகத்குமார் சின்ஹா (39), ரகுவன்ஸ் மணி பாண்டே (39) ஆகியோர் மூலமாக கமிஷன் பெற்று, இந்த ஆள்மாறாட்ட மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார். அவர்கள் இருவர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெங்களூரு நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதாக தெரியவந்தது.
அதன்பேரில், கிருஷ்ணா முராரியை அழைத்துக் கொண்டு சி.பி.சி.ஐ.டி. தனிப்படையினர் பெங்களூரு சென்றனர். நேற்று முன்தினம் பெங்களூருவில் ஷாகத்குமார் சின்ஹா, ரகுவன்ஸ் மணி பாண்டே ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
தேர்வு எழுதியது யார்?
விசாரணையில், தற்போது சிக்கியவர்களும் இடைத்தரகர்கள் என்றும், மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேர் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் 23 மாதங்களுக்கு பிறகு 3 பேர் சிக்கிய போதிலும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது யார்? அதற்கு மூளையாக செயல்பட்டது யார்? என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. அதுதொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.