வீட்டில் பதுக்கியிருந்த ரூ.3 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கியிருந்த ரூ.3 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பங்களா தெரு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக நகரசபை ஆணையாளர் ராஜாராமுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் நாராயணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், சரவணன், கணேசன், வள்ளி ராஜ், தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் இளையராஜா, விஜய் கணேஷ், கிருஷ்ணவேணி, செண்பகவல்லி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பங்களா தெருவில் உள்ள குறிப்பிட்ட ஒரு வீட்டை சோதனை செய்தனர். அந்த வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், நந்தவனம் தெருவில் குடியிருக்கும் குருசாமி மகன் முத்துக்குமார் (வயது 34) என்பவர் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வியாபாரியான முத்துக்குமாரை பிடித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.