திருக்குறுங்குடி பகுதியில் இலை கருகல் நோயால் 3 லட்சம் வாழைகள் பாதிப்பு
திருக்குறுங்குடி பகுதியில் நோய் தாக்குதலால் சுமார் 3 லட்சம் வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கருகும் வாழை மரங்களை பார்த்து விவசாயிகள் வாடுகிறார்கள். தங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஏர்வாடி:
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. ஏராளமான விவசாயிகள் பல லட்சம் வாழைகளை பயிர் செய்துள்ளனர். இதில், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ள வாழைகள் இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்டு, வதங்கி காணப்படுகிறது.
நடவு செய்யப்பட்டு 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை இலை கருகல் நோய் (பழுப்பு நோய்) தாக்கி வருகிறது. இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. இவ்வாறு சுமார் 3 லட்சம் வாழைகளை இலை கருகல் நோய் தாக்கி பாதித்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இலை கருகல் நோயினால் பாதிக்கப்பட்ட வாழைகளின் குலைகள் திரட்சியாக இருக்காது. மகசூல் பாதிக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். கருகும் வாழை மரங்களை பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ரசாயன உரங்களால் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா? அல்லது மண் பாதிப்பால் இலை கருகல் நோய் தாக்கியதா? என்பது தெரியாமல் விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர். ஒரேநேரத்தில் பல லட்சம் வாழைகளை நோய் தாக்கியதால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் கூறியதாவது:-
எப்போதும் இல்லாத அளவிற்கு இலை கருகல் நோய் பரவி வருகிறது. ஒட்டு மொத்தமாக நோய் தாக்குதலால் வாழைத்தார் விளைச்சல் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த நோய் தாக்குதலால் விவசாயிகள் கடும் துயரத்தில் உள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் குளங்களில் தண்ணீர் நிரம்ப வில்லை. இந்தநிலையில் வாழைகளை நோயும் தாக்கியுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். எனவே, வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுத்து களக்காடு பகுதியில் ஆய்வு செய்து இலை கருகல் நோய் எதனால் பரவுகிறது என்பதை கண்டறிந்து அதற்கான மருந்துகளையும் பரிந்துரைக்க வேண்டும்.
செங்களாகுறிச்சியை சேர்ந்த விவசாயி கக்கன்:- இப்பகுதியை பொருத்தவரை விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்து பணம் பெற்றும் தான் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பரவி வரும் இலை கருகல் நோயால் இந்தாண்டு வாழைத்தார் விளைச்சலுக்கு வராது என்பதால் விவசாயத்தில் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், நகைகளை திருப்ப முடியாமலும் விவசாயிகள் துன்பப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் விவசாயிகள் அரசை நம்பிதான் உள்ளனர். எனவே, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
விவசாயி நம்பி:- திருக்குறுங்குடி பெரிய குளத்தில் உள்ள பத்து காட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் ஏத்தன், ரசகதலி, ரோபோஸ்டா போன்ற ரக வாழைகள் பயிர் செய்து வருகிறோம். இதுபோன்ற நோய் பரவல் வாழைகளுக்கு வந்தது கிடையாது. இந்த ஆண்டு தான் இலை கருகல் நோய் அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வேளாண்மை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டக்கலை துறை அதிகாரிகள் சண்முகநாதன், இசக்கிமுத்து ஆகியோர் திருக்குறுங்குடியில் இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்ட வாழைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் கூறியதாவது:-
நோய் மற்றும் பூச்சி தாக்காத தாய் மரத்தில் இருந்து தரமான நடவு கிழங்குகளை தேர்வு செய்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். வயல்களில் மழைநீர் தேங்காதவாறு நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். பரிந்துரைக்கப்படும் மருந்தை தெளிக்க வேண்டும். விவசாயிகள் வாழைகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுதல் வேண்டும். ேதவையான நேரத்தில் மருந்து தெளிக்க வேண்டும். வாழைகளின் வேர்ப்பகுதி அழுகி விடுகிறது. இதை விவசாயிகள் கவனத்தில் கொண்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
பல லட்சம் வாழைகளை நோய் தாக்கி பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.