பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உடல் சிதறி பலி

கடலூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

Update: 2022-06-23 18:38 GMT

கடலூர்,

கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் அவரது மகள் வனிதா பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதையே குடோனாகவும் பயன்படுத்தி வந்தார். இந்த பட்டாசு ஆலையை வனிதாவின் கணவர் மோகன்ராஜ் (வயது 36) கவனித்து வந்தார்.

இந்த ஆலையில் நாட்டு வெடி, வாணவெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெரியகாரைக்காட்டை சேர்ந்த அகோர மூர்த்தி மனைவி சித்ரா (38), நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் மனைவி அம்பிகா (50), நடுவீரப்பட்டு அருகே உள்ள மூலக்குப்பத்தை சேர்ந்த ரத்தினவேலு மகன் சத்தியராஜ் (32), நெல்லிக்குப்பம் குடிதாங்கிச் சாவடியை சேர்ந்த சேகர் மனைவி வசந்தா (45), சி.என்.பாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராஜீ (34), எம்.புதூரை சேர்ந்த இடத்தின் உரிமையாளர் ஸ்ரீதர் மகன் ஜிந்தா (22) ஆகியோர் நேற்று வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பயங்கர சத்தத்துடன் வெடித்தது

மதியம் 12.40 மணி அளவில் ராஜீ, ஜிந்தா ஆகிய 2 பேரும் சாப்பிடுவதற்காக பட்டாசு ஆலையில் இருந்து வெளியே சென்றனர். அப்போது வெள்ளக்கரையை சேர்ந்த சின்னதுரை மகன் வைத்தியலிங்கம் (37), அவரது அண்ணன் பழனிவேல் ஆகிய 2 பேரும் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு வெடி வாங்குவதற்காக வந்தனர்.

அவர்களை வெளியே நிற்குமாறு கூறிய, தொழிலாளர்கள் வெடியை சுற்றி தருவதாக கூறினர். இதனால் அவர்கள் 2 பேரும் சுமார் 50 அடி தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காத்திருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகள் வெடித்து சிதறின. வாண வெடிகளும் வெடித்து ஆங்காங்கே சிதறியது.

3 பேர் உடல் சிதறி பலி

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வைத்தியலிங்கம், பழனிசாமி ஆகிய 2 பேரும் அலறி அடித்து ஓடினர். அப்போது வைத்தியலிங்கம் மீது வாணவெடி விழுந்து, அவரது கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்தனர். ஆனால் அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்ததாலும், புகை மூட்டமாக இருந்ததாலும் கிராம மக்களால் அருகில் செல்ல முடியவில்லை.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அங்கு பட்டாசு ஆலை வெடித்து தரைமட்டமாகி கிடந்தது.

தகரத்தால் ஆன மேற்கூரை உடைந்து ஆங்காங்கே துண்டு, துண்டாக கிடந்தது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்த சித்ரா, அம்பிகா, சத்தியராஜ் ஆகிய 3 பேரும் உடல் சிதறி பலியானார்கள். இதில் 2 பேரின் உடல் பட்டாசு ஆலை அருகிலும், ஒரு பெண்ணின் உடல் சுமார் 75 மீட்டருக்கு வெளியே முந்திரி மரத்திற்கு கீழே பாதியாக சிதறி கிடந்தது. ஆங்காங்கே கை, கால்கள், உடலின் பாகங்கள் சிதறி கிடந்தன. உடல்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு பாகங்கள் உருக்குலைந்து காணப்பட்டன.

2 பேருக்கு தீவிர சிகிச்சை

இந்த விபத்தில் படுகாயமடைந்த வசந்தா, வைத்தியலிங்கம் ஆகிய 2 பேருக்கும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த விபத்து பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடி விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலாவதியான உரிமம்

இதற்கிடையில் இந்த பட்டாசு ஆலை கடந்த 2021-ம் ஆண்டோடு உரிமம் காலாவதியாகி விட்டது. எனவே கடந்த 2022-ம் ஆண்டு உரிமத்தை புதுப்பிக்க வனிதா விண்ணப்பித்து உள்ளார். ஆனால் இதுவரை உரிமம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்