பலத்த காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்து 3 வீடுகள் சேதம்

கறம்பக்குடியில் பலத்த இடி, காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பங்கள் சாய்ந்து 3 வீடுகள் சேதமடைந்தன. வீட்டிற்குள் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள்.

Update: 2023-06-27 18:51 GMT

பலத்த காற்று

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திடீரென பலத்த காற்றும் வீசியது. சுற்றி சுழன்று அடித்த காற்றால் பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. வணிக நிறுவனங்கள், கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் தூக்கி வீசப்பட்டன.

இந்த பலத்த காற்றால் கறம்பக்குடி ஆண்டான் தெருவில் இருந்த 4 மின்கம்பங்கள் மற்றும் 2 மரங்கள் அடியோடு சாய்ந்து அப்பகுதியில் இருந்த வீடுகள் மீது விழுந்தன. இதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்தனர். மின்சாரம் தடைபட்டிருந்ததால் வீட்டில் இருந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள்.

3 வீடுகள் சேதம்

மின்கம்பங்கள் விழுந்ததில் ஆண்டான் தெருவை சேர்ந்த ராஜேஷ்குமார், சரோஜா, பிரீத்தி ஆகிய 3 பேரின் ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. வீட்டில் இருந்த பொருட்களும் நாசமாகின. இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் அங்கு சென்று பார்வையிட்டார். உடன் மின்வாரிய ஊழியர்கள் வந்து வீட்டின் மீது சாய்ந்து கிடந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை அகற்றினார்கள்.

சாய்ந்து கிடந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

மின்கம்பங்கள் சாய்ந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்