ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 வீடுகள் சேதம்; மூதாட்டி படுகாயம்

கந்தர்வகோட்டையில், 150 ஆண்டுகள் பழமையான ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 வீடுகள் ேசதமடைந்தன. இதில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்தார்.

Update: 2022-12-13 18:37 GMT

மரக்கிளை முறிந்தது

கந்தர்வகோட்டை அருகே கோமாபுரம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர்கள் முருகையன் (வயது 58), தங்கம் (55), பழனி (52). இவர்களுக்கு சொந்தமான வீடுகளுக்கு அருகில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த ஆலமரம் வீதியில் இருப்பதால் அந்த வீதியை ஆலமர தெரு என்று அந்த பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் பழமை வாய்ந்த அந்த ஆலமரம் 3 ஆண்டுகளுக்கு முன் வீசிய கஜா புயலையும் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்றது. ஆனால் தற்போது தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் மரத்தின் கிளைகளில் நீர் தேங்கி கனம் தாங்காமல் மிகப்பெரிய ஆலமரக் கிளை ஒன்று நேற்று காலை அருகில் இருந்த முருகையன், தங்கம், பழனி ஆகியோரின் வீடுகள் மீது முறிந்து விழுந்தது. இதில் 3 வீடுகளும் சேதமடைந்தன.

மூதாட்டி படுகாயம்

இதில் தங்கம் என்பவரின் மாமியார் மணியம்மை (65) தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மணியம்மையை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் மரக்கிளையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்