ரூ.3¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறையில் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது. இதையொட்டி ரூ.3¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

Update: 2023-02-15 18:45 GMT


மயிலாடுதுறையில் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது. இதையொட்டி ரூ.3¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

கண்காட்சி திறப்பு

மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளைத் தாங்கி" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடந்தது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். ராமலிங்கம் எம்.பி., ராஜகுமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் பேசுகையில், இந்த கண்காட்சியில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், ஆவின் பொருட்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. வருகிற 24-ந் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. உள்ளூர் கலைஞர்களை கொண்டு கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது' என்றார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம் சார்பாக 201 பேருக்கு ரூ.1 கோடியே 36 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு - பெருங்கடன் மற்றும் வங்கி கடன் இணைப்பு, நகர்ப்புற உணவு உற்பத்தி குழுக்கான கடன் மற்றும் வருவாய்த்துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பாக 70 பேருக்கு ரூ.11 லட்சத்து 60 ஆயிரத்து 250 மதிப்பில் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, கூட்டுறவுத்துறை சார்பில் 50 பேருக்கு ரூ.69 லட்சத்து 99 ஆயிரத்து 952, மாவட்ட தொழில் மையம் சார்பில் 5 பேருக்கு ரூ.28.30 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய தொழில் தொடங்க கடன் வசதி, வேளாண்மை துறை சார்பில் 52 பேருக்கு ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 842 மதிப்பில் வேளாண் இடுபொருட்கள் என மொத்தம் ரூ.3 கோடியே 18 லட்சத்து 61 ஆயிரத்து 996 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி கலெக்டர் யுரேகா, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி, சீர்காழி நகரசபை தலைவர் துர்காபரமேஸ்வரி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் குணாசங்கரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்