காங்கயம்
காங்கயத்தில் 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
இதுபற்றி அரசு அதிகாரிகள் கூறியதாவது:-
வடமாநில தொழிலாளர்கள்
காங்கயத்தில் அரிசி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆலைகள் அதிக அளவில் செயல்ப்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பம் குடும்பமாக தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். வேலை வாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் இங்கு பலரும் வேலை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் காங்கயம் அருகே உள்ள வட்டமலை கிராமம், பாப்பிரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தேங்காய் உடைக்கும் களத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரிக்கு சைல்டு லைன் அமைப்பின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் தலைமையில், தாசில்தார் புவனேஸ்வரி உள்ளிட்ட வருவாய்த்துறை, போலீசார், தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு 18 வயதிற்கும் கீழ் உள்ள 3 குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது தெரிய வந்தது. இதில் 2 சிறுமிகள், ஒரு சிறுவன் ஆகிய 3 பேரும் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து 3 பேரையும் மீட்ட வருவாய் துறையினர், திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் அவர்களை தங்க வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தேங்காய் கள உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-----------