3 விசைப்படகுகள் பறிமுதல்

குளச்சல் அருகே கடலில் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடித்த 3 விசைப்படகுகளை அதிகாரிகள் பறிமுதல் ெசய்தனர். இது தொடர்பாக 29 மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2022-12-17 18:45 GMT

குளச்சல், 

குளச்சல் அருகே கடலில் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடித்த 3 விசைப்படகுகளை அதிகாரிகள் பறிமுதல் ெசய்தனர். இது தொடர்பாக 29 மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தடை செய்யப்பட்ட 'சாவாளை' மீன்

அரபிக்கடல் பகுதிக்கு வரும் கர்நாடகா விசைப்படகு மீனவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 'சாவாளை' மீன்களை சட்ட விரோதமாக பிடித்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அரபிக்கடல் பகுதியான கன்னியாகுமரி, குளச்சல் கடல் பகுதியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளில் வந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடிப்பதாக குளச்சல் மீன்பிடி துறைமுக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் குளச்சல் விசைப்படகு மீனவர்கள் உதவியுடன் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த கர்நாடகாவை சேர்ந்த அமிர்தேஸ்வரி, அமிர்தானந்தா, அஜனா ஆகிய 3 விசைப்படகுகளை சுற்றி வளைத்து பிடித்தனர்.

வழக்குப்பதிவு

ெதாடர்ந்து விசைப்படகுகளையும் அவற்றில் இருந்த மீன்களையும் பறிமுதல் செய்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். இந்த விசைப்படகுகளில் 29 மீனவர்கள் இருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது 3 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மற்றவர்கள் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதனையடுத்து படகின் உரிமையாளர்கள் சச்சின், நாகம்மா, அசரப் ஆகியோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மீன்கள் ஏலம்

பறிமுதல் செய்யப்பட்ட மீன்களின் மதிப்பு ரூ.45 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மீன்கள் மீன்வளத்துறை சார்பில் ஏலம் விடப்படும் என்றும் அதன்பின்பு விசைப்படகில் இருந்த 29 மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன், இன்ஸ்பெக்டர் அருள்ரோஸ்சிங் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், கர்நாடகா மற்றும் ஆந்திரா மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்