பழனியில் அரசு டாக்டர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது

பழனியில் அரசு டாக்டர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-15 21:00 GMT

பழனி கவுண்டர் இட்டேரிசாலை பகுதியை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது 37). அரசு டாக்டர். கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். அன்று இரவு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 23 பவுன் நகை, மடிக்கணினி ஆகியவை திருடுபோய் இருந்தது. இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே வீட்டில் பதிவான கைரேகைகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை கொளத்தூரை சேர்ந்த மாணிக்ராஜ் (37), பொழிச்சலூரை சேர்ந்த ஹரிகரன் (32), பெரம்பலூர் அரும்பாவூரை சேர்ந்த பரணிதரன் (27) ஆகியோர் கோகுலகண்ணன் வீட்டில் திருடியது தெரியவந்தது. அதையடுத்து 3 பேரையும் கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கில் கோவை சிறையில் இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சிறையில் உள்ள 3 பேரையும், காவலில் எடுத்து 4 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் மீண்டும் அவர்களை கோவை சிறையில் போலீசார் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, காவலில் எடுத்து விசாரித்ததில் திருடிய நகை, கணினியை சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்