2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Update: 2022-05-31 18:54 GMT

திருப்பூர்:

திருப்பூர் நொச்சிப்பாளையம் பிரிவில் இருந்து விக்னேஸ்வரா நகர் செல்லும் வழியில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி சுப்பிரமணி என்ற தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றது தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் தொடர்புடைய திருவண்ணாமலையை சேர்ந்த நவீன்குமார் (வயது 25), செங்கம் பகுதியை சேர்ந்த அஜய் (22) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் ஏற்கனவே 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நவீன்குமார் மீது கொலைமுயற்சி, கொலைமிரட்டல் உள்ளிட்ட 3 வழக்குகளும், அஜய் மீது கொலை மிரட்டல், திருட்டு என 2 வழக்குகளும் உள்ளன. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதால் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டார்.

கோவை சிறையில் உள்ள நவீன்குமார், அஜய் ஆகியோரிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை நேற்று போலீசார் வழங்கினார்கள். திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 42 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்