மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
கோவையில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை
கோவையில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 பவுன் நகை
கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரை சேர்ந்தவர் அபர்ணா (வயது 33). இவரது கணவர் ஹரிபிரசாத் (37). இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் அபர்ணா கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
திருமணத்தின் போது எனது பெற்றோர் எனக்கு 25 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்தனர். இந்த நிலையில் எனது கணவர் வீடு கட்டுவதற்கும், செலவுக்கும் பணம் தேவை உள்ளது என்று கூறி அந்த 25 பவுன் நகையை அடமானம் வைத்தார். இந்த நிலையில் என்னிடம் கூடுதல் நகை வரதட்சணையாக வாங்கி வரும்படி கட்டாயப்படுத்தி வந்தார்.
2-வது திருமணம்
இதனால் நான், கூடுதல் நகை குறித்து எனது கணவரிடம் கேள்வி கேட்டேன். அதற்கு அவர் என்னை தாக்கினார். இந்த நிலையில் எனது கணவரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த நான் அவர் குறித்து விசாரணை நடத்தினேன். அப்போது எனது கணவர் ஹரிபிரசாத் கடந்த 2 மாதங்களுக்கு முன் 42 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இந்த திருமணத்திற்கு எனது கணவரின் தந்தை செல்வராஜ், தாய் கமலம் ஆகியோர் உடந்தையாக இருந்தாக தெரிகிறது. எனவே இதுகுறித்து எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. புகாரின் பேரில் போலீசார் அபர்ணாவின் கணவர் ஹரிபிரசாத், மாமனார் செல்வராஜ், மாமியார் கமலம், ஹரிபிரசாத்தின் 2-வது மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.