2-வது நாளாக தூய்மை பணியாளர்கள்தர்ணா போராட்டம்
மாநகராட்சி அலுவலகம் முன்பு 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.
தர்ணா போராட்டம்
வேலூர் மாநகராட்சியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்றும் 2-வது நாளாக காலை 7 மணி அளவில் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான தூய்மைபணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும், அந்த வழியாக சென்ற கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீரென காரை நிறுத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தூய்மை பணியாளர்களுக்கு ரூ.538 ஊதியமும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியமும் வழங்கப்படும். உடனடியாக வேலைக்கு செல்ல வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் பணிக்கு சென்றனர்.