2-வது நாளாக மலை கிராமங்களில் கலெக்டர் ஆய்வு

ஜவ்வாதுமலையில் இரவில் தங்கிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று 2-வது நாளாக மலை கிராமங்களில் ஆய்வு செய்தார். அப்போது குப்பைகளை அகற்ற அவர் உத்தரவிட்டார்.

Update: 2023-02-11 11:51 GMT

2-வது நாளாக ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டகலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று முன்தினம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலையில் உள்ள மிட்டூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் இரவில் தங்கினார். இந்த நிலையில் நேற்று பீமகுளம் மற்றும் நாயக்கனூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடைபயிற்சி சென்றார். அப்போது சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பீமக்குளம் மற்றும் நாயக்கனூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை, பேக்கரி, டீ கடைகளில் ஆய்வு செய்து, கடைகளில் இருப்பு வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளை அகற்றி கடை உரிமையாளர்களை பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், மஞ்சப்பைகளை தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.

குப்பைகளை அகற்ற உத்தரவு

முன்னதாக நாயக்கனூர் ஊராட்சியில் ரூ.23 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க ஊராட்சி செயலருக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கும் குப்பைகள் தேங்காதவாறு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சத்திரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து நோயாளிகளிடமும், மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார்.

அன்னதானம் வழங்கினார்

பின்னர் குடிநீர் தொட்டியை பார்வையிட்டு அதனை தூய்மைப்படுத்த உத்தரவிட்டார். முன்னதாக காலையில் மலைரெட்யூர் கிராமத்தில் உள்ள சென்றாயசாமி கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜைகளை நடத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி, துணைத் தலைவர் பூபாலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மேகலா திருப்பதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்