தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் நாளை முதல் உயர்வு !

இந்த கட்டண உயர்வு நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.;

Update:2023-03-31 11:21 IST

சென்னை,

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

நாளை (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயரும் என தெரிகிறது. சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரணூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

இதன்மூலம் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படும்.

இந்த கட்டண உயர்வு நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்