போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 280 கடைகள் அகற்றம்
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 280 கடைகள் அகற்றப்பட்டன.
மலைக்கோட்டை:
கடைகள் அகற்றம்
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள், பயணிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தரைக்கடைகள் செயல்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவாறு இருந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவின்பேரில் மாநகராட்சி உதவி ஆணையர் ரவி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சத்திரம் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பெரியசாமி டவர், சத்திரம் பஸ் நிலையம், சிங்காரத்தோப்பு, சிந்தாமணி பஜார், காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மற்றும் ஆக்கிரமித்திருந்த தரைக்கடைகள், தள்ளுவண்டி மற்றும் சாலையோர பெட்டிக்கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இடையிடையே கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் கடைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது.
போராட்டம்
இந்நிலையில் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உறையூர் பஸ் நிற்கும் பகுதியில் செயல்பட்டு வந்த 2 பெட்டிக்கடைகளை அகற்ற முற்பட்டபோது, கடை உரிமையாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வக்கீல் ஆகியோர் ேபாலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொக்லைன் எந்திரத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அந்த கடைகளை அகற்றக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 2 கடைகளையும் அகற்றும் பணியை கைவிட்டனர். மேலும் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று ஓரிரு நாட்களில் கடை அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த மற்ற கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. நேற்று மொத்தம் 180 தள்ளுவண்டி கடைகள், 85 தரைக்கடைகள், 15 பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டன.280 shops obstructing traffic will be removed
மீண்டும் தள்ளுவண்டி கடைகள்
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் கணேஷ் பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்ட பகுதியில் நேற்று மாலை மீண்டும் தள்ளுவண்டி கடைகள் வைக்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.