மேல்பாதி சம்பவத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகை 27 பேர் கைது
மேல்பாதி சம்பவத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் 27 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்கு வழிபட சென்ற ஆதிதிராவிட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், சாதி தீண்டாமை, வன்கொடுமையை கண்டித்தும் நடந்த இப்போராட்டத்திற்கு தலைமைக்கழக உறுப்பினர் அய்யனார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் விழுப்புரம் மாவட்ட தலைவர் இளையரசன், செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமர், கடலூர் மாவட்ட தலைவர் மதன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.