போக்குவரத்து நெரிசலை குறைக்க எண்ணூர் துறைமுகம்- தச்சூர் இடையே ரூ.2,673 கோடியில் புதிய சாலை

போக்குவரத்து நெரிசலை குறைக்க எண்ணூர் துறைமுகம்- தச்சூர் இடையே ரூ.2,673 கோடியில் புதிய சாலை அமைக்கப்படுகிறது.

Update: 2022-06-09 15:49 GMT

போக்குவரத்து நெரிசல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இந்த துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் வல்லூர் கூட்டு சாலை மற்றும் மீஞ்சூர்-நெமிலிச்சேரி சென்னை வெளிவட்ட சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடசென்னை அனல்மின் நிலைய சாலை வழியாக வந்து திருவெற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலை இணைப்பு சாலை வழியாக செல்லவேண்டும்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்கு வந்து செல்ல நேரிடும்போது போக்குவரத்து சிக்கலால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது.

இருபுறங்களிலும் மத்திய மாநில அரசுகளின் நிறுவனங்களான வடசென்னை அனல் மின் நிலையங்கள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏற்றுமதி-இறக்குமதி தளங்கள் கனரக வாகனங்கள் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் தொழிலாளர் உட்பட நாள்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

ரூ.2,673 கோடி நிதி ஒதுக்கீடு

போக்குவரத்து பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் சென்னை எல்லை சாலை திட்டம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டது அதன்படி எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தச்சூர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோவில், மாமல்லபுரத்தில் முடியும் வகையில் 133.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 5 பிரிவுகளாக பணிகள் செயல்படுத்த திட்டம் தீட்டப்பட்டது.

முதல் பிரிவாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வரை 25.40 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் ஜப்பான் நாட்டு நிறுவனம் நிதியுதவியுடன் செயல்படுத்துவதற்காக ரூ.2,673 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த சாலை திட்டத்தின்படி 605 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்திய நிலையில் 81 மரங்கள், 76 தனியார் கட்டிடங்கள், 11 அரசு கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி காட்டுப்பள்ளி, நாலூர், வன்னிப்பாக்கம், நெடுவரம்பாக்கம், பஞ்செட்டி தச்சூர் வழியாக செல்லும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் முடிகிறது.

மேலும் மீஞ்சூர், அனுப்பம்பட்டு இடையே ஒரு ரெயில்வே மேம்பாலம், ஒரு பல்வழி பரிமாற்ற மேம்பாலம், காட்டூர், மீஞ்சூர், பொன்னேரி நெடுஞ்சாலைகள் உள்பட 7 இடங்களில் மேம்பாலங்களும் வாயலூர், மேட்டுப்பாளையம், அக்கரம்பேடு, ஆமூர், பஞ்செட்டி போன்ற இடங்களில் சிறிய மேம்பாலங்களும் 4 கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் கால்வாய்கள், சாலை தடுப்பு சுவர்கள் 6 வழித்தட சாலை மற்றும் இருபுறமும் இரு வழித்தட சேவை சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

2025 ஜனவரி மாதத்திற்குள்

இந்த நிலையில் சாலைகள் வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டும் இருபுறங்களிலும் பள்ளங்கள் தோண்டப்படுகிறது. இதனை தொடர்ந்து பாலங்கள் அமைக்கும் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகளை 2,025 -ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பாக முடிக்க திட்டமிட்டுள்ளனர். சென்னை நகரில் இருந்து மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் குறைந்த உடன் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியும். மீஞ்சூர்- வண்டலூர் நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் இருந்து இணைப்பு சாலை ஒன்று அமைக்கப்பட்டு சென்னை எல்லை சாலையில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் வியாபாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் பயனடைவர்.

Tags:    

மேலும் செய்திகள்