ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகைகள் திருட்டு

கோவில்பாளையம் அருகே பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் 26 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2023-05-30 21:00 GMT

கோவில்பாளையம்

கோவில்பாளையம் அருகே பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் 26 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் பள்ளி ஆசிரியர்

கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே நஞ்சுண்டா புரம் புதூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 34). இவர் வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்தியா.

ராதாகிருஷ்ணனுடன் அவருடைய பெற்றோர் பாண்டியராஜன்- சாந்தி ஆகியோர் வசித்து வருகிறார்கள். அவர்கள் அங்கு பேன்சி கடை நடத்தி வருகிறார்கள். தற்போது பள்ளி விடுமுறை என்ப தால் ராதாகிருஷ்ணன் தனது பெற்றோரின் பேன்சி கடையை கவனித்து வருகிறார்.

கதவு உடைப்பு

இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் தனது மனைவி மற்றும் தாயாருடன் நேற்றுமுன்தினம் காலை பேன்சி கடைக்கு தேவையான பொருட்கள் வாங்க வீட்டை பூட்டிவிட்டு கோவை சென்றார். பாண்டியராஜன் தனது மோட்டார் சைக்கிளை பழுது நீக்க காந்திபுரம் சென்றார்.

அவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே தனது மகன் ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார்.

ரூ.10 லட்சம் நகை திருட்டு

அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இருந்த செயின், ஆரம், கம்மல் உள்பட 26 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விரைந்து சென்று விசாரணை நடத்தினார் கள். கைவிரல் ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் திருட்டு ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்