பேராசிரியர் தம்பதி வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

மதுரை அருகே கல்லூரி பேராசிரியர் தம்பதி வீட்டில் 25 பவுன் நகை திருடப்பட்டது.

Update: 2023-06-30 19:47 GMT

மதுரை அருகே கல்லூரி பேராசிரியர் தம்பதி வீட்டில் 25 பவுன் நகை திருடப்பட்டது.

25 பவுன் நகை திருட்டு

மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளம் செட்டிகுளத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 52). இவர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி டாரதி ஷீலா (48), கோரிப்பாளையத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள நகைகளை டாரதி ஷீலா சரிபார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த நகைகளில் 25 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டாரதி ஷீலா ஊமச்சிகுளம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் டாரதி ஷீலா பாதுகாப்பு அதிகமுள்ள குடியிருப்பில் வசித்து வருவதும், மேலும் வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்படாமல் இருந்ததாலும் வெளி ஆட்கள் இந்த திருட்டில் ஈடுபடவில்லை என்பது தெரிய வந்தது.

பெண் கைது

இதனை தொடர்ந்து டாரதி ஷீலா வீட்டில் பணிபுரியும் புஷ்பலதா என்ற பெண் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் புஷ்பலதா அவ்வப்போது சிறிது சிறிதாக 25 பவுன் நகைகளையும் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து புஷ்பலதாவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து நகைகளை மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்